எத்தனையோ திருகுதாளங்களைச் செய்தாலும் இந்திய அளவில் பாஜகவின் தோல்வியை மோடியால் மறைக்கவே முடியவில்லை. கருத்துக் கணிப்பு நிறுவனங்களே பாஜக வெற்றி என்று பொய்கூட சொல்ல முடியாமல் மேம்போக்காக மெத்துகின்றன. தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே இதுதான் நிலை என்றால், போகப்போக என்ன நடக்குமோ என்று தெரியாமல் மோடி கண்டபடி உளறத் தொடங்கிவிட்டார்.
குஜராத்தில் ஹர்திக் படேலை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவே பயப்படுகிறார். நீதிமன்றங்கள் மூலமாக அவருக்கு கிடைத்த இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையைக் காரணமாகக் காட்டி தேர்தலில் நிற்கமுடியாமல் செய்வதில் பாஜக வெற்றிபெற்றுவிட்டது.
இந்நிலையில்தான் மோடியின் அராஜகப் போக்கை விமர்சனம் செய்து அத்வானி வெளியிட்ட அறிக்கை பாஜகவினர் மத்தியிலும், குஜராத் மக்கள் மத்தியிலும் எதிர்விளைவை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலேயே பாஜக பெரும்பான்மைக்கு திணறிய நிலையில், மக்களவைத் தேர்தலில் மேலும் சரிவைச் சந்திக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆனால், குஜராத்தில் பாஜக 20 தொகுதிகளைப் பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிடப்படுகிறது. இத்தனைக்கும் பட்டேலுக்கு வைத்த சிலையில் விரிசல் விழுந்திருப்பதுடன், அங்கு பராமரிப்பு பணியில் ஈடுபடுவோருக்கு சம்பளம் கூட கொடுக்கவில்லை என்ற அதிருப்தி பெரிய அளவில் இருக்கிறது
எந்தப் பக்கம் போனாலும் கேட்டை போடுவதைப் போல, பாகிஸ்தான் விவகாரத்தை மட்டுமே பிடித்து தொங்கும் மோடியை, ராகுல் திருடன் என்றும், தன்னுடன் கடந்த ஐந்தாண்டு ஆட்சி தொடர்பாக விவாதிக்க பயந்து ஓடுகிறார் என்றும் ராகுல் அடிக்கிற கிண்டல் பொதுமக்கள் மத்தியில் நன்றாக எடுபடுகிறது. மோடிக்கு தன்னிச்சையாக விவாதிக்க தெரியாது என்றும், ராகுல் அளவுக்கு விவாதத் திறமையோ, கேள்விகளை எதிர்கொள்ளும் விவரமோ மோடிக்கு இல்லை என்று இளம் வாக்காளர்களே நம்பத் தொடங்கிவிட்டனர்.
எழுதிவைத்த, முன்பே தயாரிக்கப்பட்ட உரைகளை மட்டுமே ஏற்ற இறக்கத்தோடு மோடி மேடைகளில் பேசுகிறார் என்று மக்களுக்கே தெரிந்துவிட்டது. அதுமட்டுமின்றி, கடந்த ஐந்தாண்டுகளில் எதையெல்லாம் சாதனை என்று வாய் வித்தாரம் பேசி மோடி சமாளித்தாரோ, அதையெல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் பேசவே மறுக்கிறார். இதற்கு காரணம் எதுவுமே மக்களுக்கு பயனளிக்கவில்லை. அதுமட்டுமின்றி அவற்றால் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காததுடன், இருந்த வேலையையும் இழக்கும் நிலைதான் ஏற்பட்டிருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.
தென்மாநிலங்கள் 5ல் பாஜகவுக்கு 15 முதல் 20 இடங்கள் கிடைப்பதே பெரும்பாடு என்கிற உண்மையை மறைத்து மோடி வாய்ஜாலம் காட்டிக் கொண்டிருக்கிறார். எல்லா பொய் தோற்றத்தையும் உடைக்கும் வகையில், தேர்தலுக்கு பின்னர் சுயேச்சைகள், உதிரிக் கட்சிகள், எதிரிக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கவும் தயாராக இருப்பதாக கோவை கூட்டத்தில் பேசியிருக்கிறார் மோடி.
அதாவது தனது கூட்டணிக்கே பெரும்பான்மை கிடைக்காது என்று மோடிக்கு உண்மை புரியத் தொடங்கியிருக்கிறது. இப்பவே இந்த நிலையென்றால், அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களில் நிலைமை மிக மோசமாகும் என்பதையே மோடியின் பதற்றம் தெளிவுபடுத்துகிறது.