ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், நேற்று (19.11.2021) ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் காரசார விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு பேச அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, இனி முதல்வரான பின்புதான் இந்த சட்டமன்றத்திற்குள் வருவேன் என சபதமிட்டு சந்திரபாபு நாயுடு அவையைவிட்டு வெளிநடப்பு செய்தார். இதன் பின்னர் தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் கண்ணீர் மல்க அவர் பேட்டியளித்தார். அப்போது ஆளுங்கட்சியினர் தனது மனைவியைக் கடுமையான மற்றும் தரக்குறைவான வார்த்தைகளால் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டினார்.
செய்தியாளர் சந்திப்பில் சந்திரபாபு நாயுடு அழுதது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு அழுததை நாடகம் என விமர்சித்துள்ளார்.
மேலும் ஜெகன்மோகன் ரெட்டி இதுதொடர்பாக கூறியதாவது, “சந்திரபாபு நாயுடுவின் நிலையும், அவர் விரக்தியில் இருப்பதும் எனக்கு மட்டுமல்ல, மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். மாநில மக்கள் அவரை வெளிப்படையாக நிராகரித்துள்ளனர். சொந்த தொகுதியான குப்பத்தில் கூட, நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு மக்களின் நிராகரிப்பை எதிர்கொண்டார்.
சந்திரபாபு எல்லாவற்றிலுமிருந்து அரசியல் லாபத்தை மட்டுமே பெற முயல்கிறார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அப்போது நான் சபைக்குள் இல்லாவிட்டாலும் அவரது நாடகம் எல்லா கண்களுக்கும் தெரியும். சந்திரபாபு நாயுடுவின் குடும்ப உறுப்பினர்கள் குறித்து எனது கட்சி எம்எல்ஏக்கள் எதுவும் பேசவில்லை. சந்திரபாபு நாயுடுதான் எனது குடும்ப உறுப்பினர்கள் பற்றி பேசினார். அவருடைய குடும்பத்தைப் பற்றி எங்கள் தரப்பிலிருந்து எதுவும் பேசப்படவில்லை. அவைப் பதிவுகள் அதை தெளிவாக நிரூபிக்கின்றன.” இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, நேற்று சட்டப்பேரவைக்குத் தாமதமாக வந்தது குறிப்பிடத்தக்கது.