Skip to main content

8.27 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

Case against sub registrar who took bribe of 8.27 lakh

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமிபுரத்தை சேர்ந்த சங்கீதா(35) என்பவர் சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சிவக்குமார். உளுந்தூர்பேட்டை அருகே ஆதனூர் சிப்காட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். விருத்தாசலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி தேவநாதன் தலைமையில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

 

அப்போது முதற்கட்டமாக, கணக்கில் வராத 3.50 லட்சம் ரூபாய் பணம் இருப்பதைக் கண்டறிந்து, அது தொடர்பாக சார்பதிவாளர் சங்கீதா மற்றும் புரோக்கர் உதயகுமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் கைப்பற்றப்பட்ட பணம் நிலங்களை பதிவு செய்ய வந்த மக்களிடம் பெற்ற லஞ்சம் பணம் என்பது தெரியவந்தது. மேலும் தீவிரமாக நடத்தப்பட்ட விசாரணையில் சார் பதிவாளர் சங்கீதா நாள்தோறும் அலுவலகத்திற்கு பத்திரப்பதிவு செய்வதற்கு, வரக்கூடிய பொது மக்களிடம் வாங்கும் லஞ்சப் பணத்தை 2, 3 லட்சமாக சேர்த்து உளுந்தூர்பேட்டை திருப்பதி திருமலை நகரில் 10 (Flate) வீட்டு மனைகள் வாங்கியுள்ளதாகவும், அதற்காக ரியல் எஸ்டேட் உரிமையாளர் விருத்தாசலம் பெரியார் நகர் குமார் என்பவருக்கு தான் வாங்கிய லஞ்சப் பணத்தை GPay மற்றும் வங்கி மூலம் அனுப்பியதும் தெரிய வந்தது.

 

அவ்வாறு 42 லட்ச ரூபாய் பணத்தை அனுப்பியதும் தெரிந்தது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் ரியல் எஸ்டேட் நில உரிமையாளர் குமாரிடம் கொடுக்க வைத்திருந்த லஞ்சப் பணமான 3.50 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையின் போது பிடித்தனர். மேலும் அதற்கு உறுதுணையாக இருந்த புரோக்கர் உதயகுமாரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரித்தனர். சுமார் 5 மணி நேர விசாரணைக்கு பின்பு பத்திரப்பதிவுக்காக பொதுமக்களிடம் லஞ்சமாக புரோக்கர்கள் மூலம் சார்பதிவாளர் சங்கீதா பெற்ற பணம் மற்றும் ஜிபே, போன்பே வழியாக பெற்ற ரூபாய் 8 லட்சத்து 10 ஆயிரம், ஆவண எழுத்தர்கள் பாலதண்டாயுதம், கந்தசாமி ஆகியோர் சார்பதிவாளருக்கு கொடுக்க வைத்திருந்த லஞ்ச பணம் ரூபாய் 17 ஆயிரத்தையும் கைப்பற்றினர் . மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இவ்வாறு லஞ்ச பணம் பெற்றது தொடர்பாக சார்பதிவாளர் சங்கீதா, அவரது உதவியாளர் ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெருவை சேர்ந்த விஜயகுமார் மகன் உதயகுமார்(34), விருத்தாசலம் பெரியார் நகர் ரியல் எஸ்டேட் உரிமையாளர் குமார்(45), ஆவண எழுத்தர்கள் கந்தசாமி, பாலதண்டாயுதம் ஆகிய 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

 

லஞ்ச வழக்கில் சிக்கிய சார்பதிவாளர் சங்கீதா ஏற்கனவே சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் விருத்தாசலத்தில் பணியாற்றி வருகிறார் என்பதும், இந்த காலகட்டத்தில் தான் அதிக அளவு லஞ்சம் வாங்கியுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்