ஜனநாயக நாடுகளின் 2023 ஆம் ஆண்டுக்கான உச்சி மாநாடு நேற்று (29.03.2023) காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசுகையில், "இந்திய அரசின் ஒவ்வொரு முயற்சியும் இந்திய குடிமக்களின் கூட்டு முயற்சியால் எடுக்கப்படுகிறது. இதுவே ஜனநாயகத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். எங்கள் இதிகாசமான மகாபாரதத்தில் குடிமக்களின் முதல் கடமை மற்றும் தங்களின் தலைவர்களை தேர்ந்தெடுப்பது பற்றி கூறப்பட்டுள்ளன. மேலும் புனித வேதங்கள் பரந்துபட்ட அடிப்படையில் அரசியல் அதிகாரம் பயன்படுத்துவதை பற்றி கூறுகின்றன. பழங்கால இந்தியாவின் ஆட்சியாளர்கள் பரம்பரையாக இல்லாமல் குடியரசு அரசுகளின் ஆட்சியை பின்பற்றிய வரலாற்று சான்றுகள் பல இருக்கின்றன.
இந்தியா உண்மையில் ஜனநாயகத்தின் தாயாக விளங்குகிறது. ஜனநாயகம் என்பது ஒரு கட்டமைப்பு மட்டுமல்ல அது ஒரு உத்வேகமும் ஆகும். ஒவ்வொரு மனிதனின் தேவைகளும் விருப்பங்களும் சமமான முக்கியத்துவம் பெற்றது என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது" எனப் பேசினார்.