இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "புதிய இந்தியாவுக்கான தொலைநோக்கு திட்டங்கள் குறித்து குடியரசு தலைவர் தனது உரையில் விவாதித்தார். ஜனாதிபதி விவசாயம் மற்றும் உழவர் நலன் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். குறைந்தபட்ச ஆதார விலை, பயிர் காப்பீடு மற்றும் நீர்ப்பாசனம் போன்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை தீர்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. அதேபோல பல ஆண்டுகளாக, வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட தூரம் ஒரு காரணமாக அமைந்தது. ஆனால் தற்போது அது மாறிவிட்டது. வடகிழக்கு வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளில் இருந்து எங்கள் அரசு மாறுபட்டு செயல்படுகிறது. அதேபோன்ற ஆட்சி முறையை நாங்களும் பின்பற்றியிருந்தால், அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவு ஒருபோதும் ரத்து செய்யப்பட்டிருக்காது. முத்தலாக் காரணமாக முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ராமஜென்ம பூமி பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்திருக்கும். கர்த்தார்பூர்-சாஹிப் வழித்தடம் அமைந்திருக்காது. இந்தியா-வங்கதேசம் நில ஒப்பந்தம் ஏற்பட்டிருக்காது. குடியுரிமைச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் போராட்டப்பகுதியில் மக்களை தூண்டிவிடுகின்றன. இந்த சட்டத்தால் இந்திய குடிமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது" என தெரிவித்தார்.