செல்லும் இடமெல்லாம் பொய் சொல்லும் மோடி!:
ராகுல் காந்தி
மோடி தூய்மை இந்தியாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். மக்கள் அவர்களிடம் உண்மை இந்தியாவை எதிர்பார்த்து வேண்டி நிற்கின்றனர் என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சரத் யாதவ் தலைமையில், நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ‘பிரதமர் மோடி செல்லும் இடங்களிலெல்லாம் பொய்யைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால், மக்கள் அவரிடத்தில் உண்மை இந்தியாவை (சச் பாரத்தை) எதிர்பார்க்கின்றனர். 2014-ஆம் ஆண்டு அவர் தந்த தேர்தல் வாக்குறுதிகளில் எதனை நிறைவேற்றிவிட்டார்? வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தைக் கொண்டுவந்தாரா? நாட்டில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறாரா? என அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். பற்றி பேசிய அவர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றும் முயற்சியில் இந்த அமைப்பு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேக் இன் இந்தியா பற்றி பேசுகிறார்கள், இந்தியா முழுவதும் சீனப் பொருட்கள்தான் இறக்குமதி ஆகின்றன என சரத் யாதவ் தன் தரப்பு விமர்சனத்தை முன்வைத்தார்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த காங்கிரஸ் தலைவர்கள், சிபிஎம் கட்சியின் சீத்தாராம் எச்சூரி மற்றும் சிபிஐ கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- ச.ப.மதிவாணன்