
மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி (89) உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் காலமானார்.
சோம்நாத் சட்டர்ஜி சிறுநீரகம் பாதிப்பு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பிறகு சற்று உடல்நலம் தேறி வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் அவர் தற்போது உயிரிழந்தார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் இடம் பெற்றிருந்த சோம்நாத் சட்டர்ஜி, நாடாளுமன்ற எம்.பி.யாகவும் 10 முறை இருந்தார். 2008–ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை வாபஸ் பெற்ற பிறகும், சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்யாததால், அக்கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,”முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நாடாளுமன்றத் ஜனநாயகத்தை நிலைநாட்டியவர். ஏழைகளுக்கும், பாதிக்கபட்டோருக்கும் குரல் கொடுத்தவர், இந்திய அரசியலில் சிறந்து விளங்கியவர்” என்று சோம்நாத் சாட்டர்ஜியை புகழ்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.