நீரவ் மோடி ஊழல் விவகாரத்தில் அருண் ஜேட்லி பொறுப்பேற்க வேண்டும் என்றும், மீதமிருக்கும் காலத்தில் மோடி அரசு விளக்கவேண்டியதே நிறைய உள்ளது என்றும் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தேசிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்றுள்ள ஊழல் நாட்டையே உலுக்கியுள்ளது. ரூ.11ஆயிரம் கோடிக்கு மேல் பண மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ள நிலையில், இதற்கு ஆடிட்டர்களும், வங்கி ஊழியர்களுமே காரணம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா, ‘மத்திய நிதியமைச்சரால் ஒவ்வொரு நாளும் அனைத்து நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளைக் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால், ஒவ்வொரு மத்திய அமைச்சரும் அவரவருக்கான துறையைக் கண்காணிக்கும் பொறுப்பைக் கொண்டிருப்பதாக நம் அரசியலமைப்புச் சட்டம் உணர்த்துகிறது. எனவே, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்த மாபெரும் ஊழலில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளமுடியாது’ என தெரிவித்தார்.
இப்படி பொறுப்பேற்பது முதல்முறையல்ல. வரலாறு அதைத் தான் சொல்கிறது எனக் கூறிய அவர், ‘1992ஆம் ஆண்டு ஹர்சத் மேத்தா ஊழல் விவகாரத்தில், அப்போது நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார். கேத்தன் பரேக் ஊழல் விவகாரத்தில் நிதியமைச்சராக இருந்த நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்’ என தெரிவித்தார்.
மேலும், பிரச்சனைகள் வரும்பொழுது சம்மந்தமில்லாத விஷயங்களை முன்னிறுத்தி திசைதிருப்பது ஒரு அரசுக்கு அழகல்ல எனக்கூறிய யஷ்வந்த் சின்கா, தன் ஆட்சிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், மோடி அரசு பல விஷயங்களை விளக்குவதற்கு கடமைப்பட்டுள்ளது எனவும் கூறினார்.