மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேற்று முன்தினம் மக்களவையில் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு துணைத் தலைவர் கௌரவ் கோகோய் எம்.பி. விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.
இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டாவது நாளாக நேற்றும் நடைபெற்றது. நேற்று மக்களவையில் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். இதையடுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் நேற்று பதிலளித்துப் பேசினர்.
இந்நிலையில் இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி மக்களவைக்கு வருகை புரிந்தார். தொடர்ந்து பதிலளித்து பிரதமர் மோடி பேசுகையில், ''எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கடவுளின் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். மத்திய அரசு கொண்டு வந்த பல மசோதாக்கள் நாட்டின் வளர்ச்சிக்காக நிறைவேற்றப்பட்டுள்ளன. நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும். நாட்டின் வளர்ச்சியில் எதிர்க்கட்சிகளுக்கு துளி கூட அக்கறை இல்லை. 2019 தேர்தலில் எதிர்க்கட்சிகள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மக்கள் கொண்டு வந்துவிட்டனர்.
எதிர்க்கட்சிகளுக்கு ஏழைகளின் பசி மீது அக்கறை இல்லை அதிகாரத்தின் மீது ஆசை. எதிர்க்கட்சிகள் மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் என அன்றே கூறினேன். அரசியலில் எதிர்க்கட்சிகள் ஃபீல்டிங் செய்கிறது. ஆளுங்கட்சி சிக்ஸர் அடிக்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது 'நோ பால்'. எல்லா தருணத்திலும் எதிர்க்கட்சிகள் மக்களுக்கு துரோகத்தைத் தான் செய்திருக்கிறது. எவற்றையெல்லாம் அரசியல் செய்யக்கூடாதோ அவற்றையெல்லாம் அரசியல் செய்கிறார்கள்.
நாட்டுக்கு நீங்கள் ஏமாற்றத்தை தவிர வேறு எதையும் தரவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ஷ்டம் இல்லாமலேயே இருக்கிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது முதல் நாளில் ராகுல் காந்தி பேசாதது ஏன்? ஊழல் இல்லாத இந்தியாவை நாங்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளோம். பாஜகவுக்கு இந்திய இளைஞர்களின் மீது நம்பிக்கை உள்ளது. இளைஞர்களுக்கான பல்வேறு திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். அதலபாதாளத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரத்தை நாங்கள் உயர்த்திக் கொண்டு வந்திருக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் 13.5 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம்.
எங்களுடைய சாதனைகள் தான் எதிர்க்கட்சிகளுக்கு சோதனையை கொடுத்துள்ளது. உலக நாடுகளுக்கு தெரியும் இந்தியாவின் வளர்ச்சி. ஆனால் எதிரில் இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை. தூய்மை இந்தியா திட்டத்தை உலக சுகாதார நிறுவனமே பாராட்டி இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக எதிர்க்கட்சிகள் என்னை மிகவும் மோசமாக விமர்சித்தார்கள். எதிர்க்கட்சிகளின் வசவு மொழிகளை நான் வாழ்த்துக்களாக எடுத்துக் கொள்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக என்னை அவமானப்படுத்துவதுதான் எதிர்க்கட்சிகளின் வேலையாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் யாரைத் திட்டுகின்றனரோ அவர்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்து விடுவார்கள்.
காங்கிரஸிடம் தெளிவான தேர்தல் வியூகம் இல்லை. எனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் இந்தியா உலக பொருளாதாரத்தில் மூன்றாவது நாடாக உயர்ந்திருக்கும்.'' எனக் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆனால் எந்த இடத்திலும் அவர் மணிப்பூர் பற்றியோ மணிப்பூர் என்ற வார்த்தையையோ குறிப்பிடவில்லை. இதனால் மோடியை நோக்கி எதிர்க்கட்சிகள் ''மணிப்பூர்... மணிப்பூர்...'' எனக் கோஷம் எழுப்பி வருகின்றனர்.