‘மோடியை ஆதரித்தது தவறு என்று உணர்கிறேன்!’ - பாஜக மூத்த தலைவர் அருண் ஷோரி
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அருண் ஷோரி, பிரதமர் வேட்பாளராக இருந்த மோடியை ஆதரித்தது தவறு என்று இப்போது உணர்வதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, பாஜக அரசு மேற்கொண்டுள்ள திட்டங்கள் தோல்வியடைந்தவை மற்றும் பேரழிவிற்கு வழிவகுக்கக் கூடியவை என கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
தற்போது, பாஜக தலைவர் அருண் ஷோரி ஒரு விழாவில் பேசுகையில், ‘நான் இரண்டு தவறுகள் செய்துவிட்டேன். ஒன்று பிரதமர் வேட்பாளராக இருந்த வி.பி.சிங்கை ஆதரித்ததும், பிரதமர் வேட்பாளராக இருந்த மோடியை ஆதரித்ததும்தான் அவை. ஆட்சி அதிகாரங்களில் அமரப்போகிறவர்களின் பண்புகளை, அவர்களது தேர்தல் வாக்குறுதிகளை வைத்து இல்லாமல் அவர்கள் கடந்தகாலங்களில் என்ன சொன்னார்கள் என்பதை வைத்து புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்பதை வைத்து அடையாளம் காணவேண்டும். மக்களும், நானும், செய்தித்தாள்களும் ‘குஜராத் மாடல்’ என்ற கூற்றை சரியாக அடையாளம் காணத் தவறிவிட்டோம். அது முதல் இடத்தில் இல்லை என்பது இப்போதுதான் நமக்கு தெரிகிறது’ எனக்கூறினார். மேலும், இவர் இந்தியாவில் வேலைவாய்ப்பை உயர்த்துவோம் எனக்கூறிய மோடியின் வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் போனதையும் குறிப்பிட்டார்.
பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்