ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி ஹரியானாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 21-ம் தேதி தேர்தலும், அதன் பின் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இந்நிலையில் ஹரியானாவில் உள்ள சார்கி தாத்ரி எனும் இடத்தில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவுக்கு சொந்தமான ஆற்று நீர் பாகிஸ்தானுக்கு சென்று வருகிறது. இந்த் நீரைப் பெறுவதற்கு ஹரியானா, ராஜஸ்தான் மாநில மக்களுக்குதான் அதிக உரிமை இருக்கிறது. இதற்கு முன் ஆண்ட அரசுகள் இதனை தடுத்திருக்க வேண்டும். ஆனால் தடுக்கவில்லை. ஆனால் மோடியாகிய நான் உங்களுடன் துணை நின்று அதனை தடுப்பேன்" என்றார்.
அப்போது ஹரியானா மாநிலத்தின் சிறப்புகள் பற்றி பேசிய அவர், "சமீபத்தில் தமிழகத்தின் மகாபலிபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்தேன். அப்போது ஜி ஜின்பிங் 'டங்கல்' திரைப்படம் பற்றி பேசினார். நாங்கள் இருவரும் அதுகுறித்து பேசிய போது, இந்தியாவில் உள்ள பெண்கள் சிறப்பாக நடித்துள்ளதாக அவர் பெருமையாகக் குறிப்பிட்டார். இதைக் கேட்கும்போது ஹரியானாவைப் பற்றி நான் பெருமையாக உணர்ந்தேன்" என கூறினார்.