டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துவருகிறது.
2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் மக்களை தவறாக வழிநடத்துகிறது என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து ஜார்க்கண்ட் பிரச்சார மேடையில் பேசிய பிரதமர் மோடி, "குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடும் மாணவர்கள், ஜனநாயக முறையில் அரசுடன் விவாதிக்க முன்வர வேண்டும். குடியுரிமை சட்டம் தொடர்பாக இஸ்லாமியர் மத்தியில் காங்கிரஸ் கட்சி அச்சத்தை உருவாக்கி வருகிறது. மறைந்திருந்து தாக்கும் இந்த மாதிரியான கொரில்லா அரசியல் வேண்டாம். தைரியம் இருந்தால் பாகிஸ்தான் குடிமக்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்க காங்கிரஸ் தயாரா?" என பேசினார்.