உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் மகளிரிடம் குறைகேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் மீனா குமாரி கலந்துகொண்டார். அப்போது அவரிடம் உத்தரபிரதேசத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து கேள்வியெழுப்பட்டது.
அதற்கு பதிலளித்த மீனாகுமாரி, "பெண்கள் எப்போதும் கடுமையான கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும். அவர்கள் எங்கு செல்கிறார்கள், யாருடன் செல்கிறார்கள் என்பதை சோதனை செய்ய வேண்டும். பெண்களுக்கு தொலைபேசியை கொடுக்கக்கூடாது. பெண்கள் ஆண்களுடன் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசுகிறார்கள், பின்னர் அவர்களுடன் ஓடிவிடுகிறார்கள். அவர்களது தொலைபேசி சோதிக்கப்படுவதில்லை. குடும்பத்தினருக்கும் இதுகுறித்து தெரிவதில்லை" என கூறினார்.
மகளிர் ஆணைய உறுப்பினரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது கருத்து சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தனது கருத்து குறித்த விளக்கமளித்துள்ள மீனாகுமாரி, "கிராமங்களை சேர்ந்த சிறுமிகளுக்கு சரியான முறையில் தொலைபேசிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியாது. ஆண்களோடு நண்பர்களாக தொலைபேசியை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். பின்னர் அவர்களோடு ஓடி விடுகிறார்கள் என்ற அர்த்தத்தில் கூறினேன்" என தெரிவித்துள்ளார்.