கேரளாவில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இருந்துவரும் காங்கிரஸ் உம்மன்சாண்டி, மக்களோடு மக்களாக நெருங்கிப் பழக கூடியவர். அவர் முதல்வராக இருந்த போது சொந்த கட்சியினர் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியினரிடமும் நெருங்கிப் பழக கூடியவர். இதனால் கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சி தொண்டர்களும் உம்மன்சாண்டி மீது நல்ல ஒரு மரியாதையை காட்டி வந்தனர்.
இந்த நிலையில் உம்மன்சாண்டி 1970-ல் தனது 27 ஆவது வயதில் சொந்த மாவட்டமான கோட்டயம் புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்றிலிருந்து தொகுதி மக்களிடத்தில் நல்லதொரு பழக்கத்தையும் மரியாதையும் காட்டி வந்த உம்மன்சாண்டி, அந்த தொகுதியில் தொடர்ந்து 11 முறை போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். அவரை எதிர்த்து பிரதான கட்சியான மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் தொடர்ந்து போட்டியிட்டும் உம்மன்சாண்டியை தோற்கடிக்க முடியவில்லை.
மேலும் 2004 மற்றும் 2016ல் இரண்டு முறை கேரளா முதல்வராகவும் இருந்துள்ளார். அது போல் 4 முறை அமைச்சராகவும், 4 முறை சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இதன் மூலம் அவர் தொடர்ந்து 18,728 நாட்களை கடந்து சட்டமன்ற உறுப்பினர் ஆக தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் 51 ஆண்டுகளாக ஒரே தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தொடரும் உம்மன்சாண்டிக்கு கேரளா காங்கிரசார் மற்றும் புதுப்பள்ளி தொகுதி மக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.