3 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை ஜாமீனில் வெளியே வந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் கவுஷாம்பி மாவட்டத்தை சேர்ந்தவர் 19 வயது பெண். இவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பவான் நஷாத் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி பவான் நஷாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை அந்த பெண் வாபஸ் பெற்றால் தான் வெளியே வர முடியும் என்பதை உணர்ந்த பவான் நஷாத், தனது சகோதரர் அசோக் பஸ்வானிடம் கூறி அந்த பெண்ணை வாபஸ் பெற வைக்குமாறு கூறியிருக்கிறார்.
அதன்படி, அசோக் பஸ்வானும் பலமுறை அந்த பெண்ணின் குடும்பத்தை மிரட்டி வாபஸ் பெற வேண்டும் எனக் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண் இதற்கு திட்டவட்டமாக மறுத்துள்ளார். அசோக் பஸ்வான் ஏற்கனவே கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சிறையில் இருந்த பவான் நஷாத் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன்பின்னர், பவான் நஷாத்தும், அசோக்கும் அந்த பெண்ணின் ஊருக்கு சென்றுள்ளனர். அங்கு சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை வழிமறித்து, வழக்கை வாபஸ் பெறாததற்காக அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர். மேலும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கோடாரியால் அந்த பெண்ணை வெட்டி கொலை செய்து அந்த இடத்தை விட்டு தப்பி சென்றிருக்கின்றனர். இந்த சம்பவத்தை அறிந்த அந்த ஊர் பொதுமக்கள் இது குறித்து காவல்துறையினரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், கொலையான அந்த பெண்ணை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.