Skip to main content

முதல் நாள் கரோனா பரிசோதனை கருவி, மறுநாள் பிரசவம்... இந்திய சாதனை பெண்ணின் நெகிழ்ச்சி தருணம்...

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

கரோனாவை கட்டுப்படுத்த குறைந்த விலையிலான கருவியை வெறும் ஆறு வாரங்களில் கண்டறிந்த ‘மைலேப் டிஸ்கவரி’ நிறுவனத்தின் வெற்றிக்குப் பின்னால் நிறைமாத கர்ப்பிணியான மினால் தக்வே போஸ்லே என்ற ஆராய்ச்சியாளர் இருந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. 

 

Minal Dakhave Bhosale who gave India its first COVID-19 testing kit

 

 

உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,21,412 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,004 பேர் குணமடைந்துள்ளனர், 33,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாகக் கேரளாவில் 194 பேரும், மகாராஷ்டிராவில் 193 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ள சூழலில், இதிலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா பரிசோதனை வேகத்தை அதிகரிக்க பல்வேறு புதிய கருவிகள் கண்டறியும் சோதனைகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் புனேவில் செயல்படும் நிறுவனம் ஒன்று புதிய கரோனா பரிசோதனை கருவியைக் கண்டறிந்துள்ளது. இதுவரை ஜெர்மன் நிறுவன பரிசோதனை கருவியே இந்தியா முழுவதும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த சூழலில், புனேவில் செயல்படும் மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் என்ற இந்த நிறுவனம் கண்டறிந்த இந்த புதிய கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த உபகரணத்தின் மூலம் ஒரு வாரத்திற்குள் 1.5 லட்சம் சோதனைகள் வரை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனைக்கருவியின் உற்பத்தி தற்போது தொடங்கப்பட்டுள்ள சூழலில், இந்த கருவியைக் கண்டறியும் குழுவின் தலைமை பொறுப்பை வகித்தது நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான மினால் தக்வே போஸ்லே எனத் தெரிய வந்துள்ளது. நிறைமாத கர்ப்பிணியான இவர் தனது ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த 10 பேருடன் இணைந்து இரவு பகலாக இந்த கருவியைக் கண்டறியும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

பல மாதங்கள் எடுத்துக்கொள்ளும் இந்த ஆராய்ச்சி பணிகளை மினால் தலைமையிலான இந்த குழு வெறும் ஆறு வாரங்களிலேயே முடித்துள்ளது. இந்த கருவியைக் கண்டறிந்து கடந்த மார்ச் 18 ஆம் தேதி தேசிய வைரலாஜிஸ்ட் நிறுவன அதிகாரிகளிடம் ஒப்படைத்த மினால், மார்ச் 19 அன்று பிரசவ வலி ஏற்பட்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

அடுத்தடுத்த நாட்களில் தனது வாழ்வில் நிகழ்ந்த இருவேறு முக்கியமான தருணம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ள மினால், "பரிசோதனை கருவியைக் கண்டுபிடித்த பிறகு, 2 குழந்தைகளைப் பெற்றெடுத்த போன்ற ஒரு உணர்வு எனக்கு இருந்தது. பரிசோதனை கருவியைக் கண்டுபிடித்தது, குழந்தை பிறப்பு ஆகிய இரண்டுமே ஒரே நேரத்தில் நடந்தன. அந்த இரண்டிலும் சவால்கள் இல்லாமல் இல்லை. அறுவை சிகிச்சை மூலம்தான் எனக்குக் குழந்தை பிறந்தது.

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும், நமது நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் மட்டுமே என் மனதில் தொடர்ந்து இருந்தது. கடந்த 5 ஆண்டுகளாக இந்தத் துறையில் பணியாற்றுகிறேன். இதுபோன்ற அவசரமான கால கட்டத்தில் வேலை செய்யாவிட்டால், என் பணியால் என்ன பயன்?" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்