ஜம்மு காஷ்மீரில், கடந்த அக்டோபர் மாத தொடக்கத்திலிருந்தே தீவிரவாதிகள் குடிமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திவருகின்றனர். கடந்த மாதம் மட்டும் 11 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்தக் கொலைகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்குகள் சிலவற்றை தேசிய புலனாய்வு முகமை விசாரித்துவருகிறது.
மேலும், இந்தக் கொலைகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகளுடன் தொடர்புடைய 900த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்தக் கொலைகளை செய்த தீவிரவாதிகளை ஒடுக்க களமிறங்கிய பாதுகாப்பு படைகள், ஜம்மு காஷ்மீரில் 11 என்கவுன்டர்களை நடத்தி 17 தீவிரவாதிகளைக் கொன்றுள்ளனர். இந்த என்கவுன்டர்களில் பொதுமக்களைக் கொலை செய்த தீவிரவாதிகளில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுவிட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்தது. மேலும், அங்கு நிலவும் நிலைமையைக் கையாள கூடுதலாக 5,000 பாதுகாப்பு படைவீரர்கள் ஜம்மு காஷ்மீரில் குவிக்கப்பட்டனர்.
இந்தச் சூழலில் ஸ்ரீநகரில் காஷ்மீர் பண்டிட் ஒருவருக்கு சொந்தமான கடை ஒன்றில் வேலை செய்த முகமது இப்ராஹிம் என்ற நபர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர், கொலையாளிகளைத் தேடிவருகின்றனர்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.11.2021), ஸ்ரீநகரில் ஒரு காவல்துறை அதிகாரி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.