தெலங்கானா மாநிலம், வாரங்கலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 9 பேரின் உடல்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கொர்ரகுண்டா பகுதியில் செயல்பட்டுவரும் சணல் தொழிற்சாலையில் 20க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். சதீஷ் குமார் என்பவருக்குச் சொந்தமான இந்தத் தொழிற்சாலை ஊரடங்கு காரணமாக மூடப்பட்டதால், தொழிலாளர்கள் அனைவரும் சதிஷ்குமாரின் வீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், நேற்று தொழிலாளர்களைப் பார்க்கச் சென்ற சதீஷ்குமார், அங்கிருந்த சில தொழிலாளர்களைக் காணாததால் அருகே உள்ள பகுதிகளில் தேடிப் பார்த்துள்ளார். அப்போது அங்கு உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் நான்கு பேரின் உடல்கள் மிதப்பதை அவர் கண்டுள்ளார். இதனையடுத்து இந்தத் தகவலறிந்த வாரங்கல் போலீஸார், வருவாய்த் துறையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரின் உடல்களை மீட்டனர்.
இதனிடையே அதே கிணற்றிலிருந்து நேற்று காலை மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட 9 பேரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக வாரங்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், இறந்தவர்களின் உடல்களில் காயம் இல்லாததால் தற்கொலை வழக்காக இதனைப் பதிவு செய்துள்ளனர். இறந்த ஒன்பது பேரில் மூன்று வயதுக் குழந்தை உட்பட ஐந்து பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் மேற்கு வங்கத்திலிருந்து அங்கு வந்து பணியாற்றியதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள நான்கு பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவர்களுடன் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் இரண்டு பேரைக் காணவில்லை. எனவே இது கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கும் போலீஸார், இது தொடர்பாக 5 குழுக்கள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.