பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்நிலையில் வங்கிகள் இணைப்புக்கு எதிராகவும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்கக் கோரியும் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
அதன் படி 26- ஆம் தேதி முதல் 29- ஆம் தேதி வரையிலான 4 நாட்கள் மட்டுமே வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் அக்டோபர் 2- ஆம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். அடுத்த வாரம் பெரும்பாலான வங்கிகள் 3 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் என்பதால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. காசோலைகள் மட்டும் தேக்கம் அடையாது. ஏ.டி.எம். எந்திரங்களிலும் பணம் நிரப்பப்படாது என்பதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு கடும் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் வங்கிகள் உடனான சேவையை பெற முன் கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதே போல் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், நாடு முழுவதும் தினமும் 48 ஆயிரம் கோடி வரை காசோலை பரிவர்த்தனை பாதிக்கும். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 4 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.