டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரும் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வியை எழுப்பியுள்ளது.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி டெல்லியை சேர்ந்த ரிஷப் சர்மா, வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி, ரீபக் கன்சலின் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த பொதுநல மனுவில், 'டெல்லியில் விவசாயிகள் அதிகளவில் கூடியுள்ளதால் கரோனா தொற்று பரவல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சாலைகளை மறித்துப் போராடுவதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் இன்று (16/12/2020) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுத்தது யார்? சாலைகளை மூடியது யார்? என சரமாரி கேள்வி எழுப்பி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். "விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் விவசாய சங்க பிரதிநிதிகள், பாரதிய கிஸான் யூனியனைச் சேர்ந்த பிரதிநிதிகள், மத்திய அரசு அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். உரிய முறையில் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் நாடு தழுவிய பிரச்சனையாக மாறிவிடும்" என்று கூறிய நீதிபதிகள், மத்திய அரசுடன் டெல்லி, ஹரியானா மாநில அரசுகளும் நாளை (17/12/2020) பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கில் விவசாய சங்கங்கள் எதிர் மனுதாரர்களாக இணைய அனுமதி வழங்கி, வழக்கு விசாரணையை நாளைக்கு (17/12/2020) ஒத்திவைத்தனர்.
இதனிடையே, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி 21- வது நாளாக டெல்லியில் விவசாயிகள் கடும் குளிரிலும் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.