பெண்களின் கருக்கலைப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதனை மாநிலங்களவையில் நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு. இந்தியாவில் பெண்கள் தங்களின் கருவைக் கலைப்பதற்கான சட்டம் அமலில் இருக்கிறது. அதன்படி, 20 வாரம் வரை வளர்ந்த கருவை பெண்கள் கலைத்துக்கொள்ள சட்டம் அனுமதி அளித்து வருகிறது.
அதேசமயம், பல்வேறு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சூழல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் ஆகியோரின் நலன்களை முன்னிறுத்தி, பெண்களின் கருக் கலைப்பு காலத்தை 24 வாரங்களாக சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று சமூக நலன் சார்ந்த அமைப்புகளும், பெண்ணிய அமைப்புகளும் மத்திய அரசுக்கு நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்தபடி இருந்தன. மேலும், தாய் மற்றும் கருவில் உள்ள சிசுவுக்கு ஆபத்து இருந்தாலும் கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அந்தக் கோரிக்கைகளில் வலியுறுத்தப்பட்டு வந்தன.
இது தொடர்பாக சில வருடங்களாகவே சுகாதாரத்துறை வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது மத்திய அரசு. இந்நிலையில், வல்லுநர்களின் பரிந்துரையின்படி, கருக் கலைப்பு காலத்தை நீட்டிக்க முடிவு செய்த மத்திய சுகாதார அமைச்சகம், கடந்த வருடம் இதற்கான சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்தது. இதற்கான கேபினெட்டின் ஒப்புதலையும் பெற்று மக்களவையில் இந்தச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சூழலில், நேற்று (16.03.2021) மாநிலங்களவையிலும் இந்தச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் இதனை எதிர்த்த நிலையிலும் மசோதாவை நிறைவேற்றியது மத்திய அரசு. இதனை அடுத்து ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்ததும் சட்டத் திருத்தம் அமலுக்கு வரும். அதன்படி, 24 வாரகால கருவைக் கலைக்க பெண்களுக்கு அனுமதி கிடைக்கும். இதற்கிடையே இந்தச் சட்டத் திருத்தம் குறித்த எதிர்மறை விமர்சனங்களும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளன.