சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ சியென் லூங், நாடாளுமன்ற விவாதத்தின்போது இந்தியாவின் முன்னாள் பிரதமர் , ஜவஹர்லால் நேருவை குறிப்பிட்டு பேசினார். “சுதந்திரத்தை போராடி வென்றவர்கள், மிகுந்த தைரியத்தையும், மகத்தான கலாச்சாரத்தையும், சிறந்த திறனையும் கொண்ட தனிமனிதர்கள். அவர்கள் நெருப்பாற்றை கடந்து வந்து மக்களின், நாடுகளின் தலைவரானார்கள். அவர்கள் டேவிட் பென்-குரியன், ஜவஹர்லால் நேரு ஆகியோர் அத்தகைய தலைவர்கள்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசும்போது அவர், ”ஊடக செய்திகளின்படி நேருவின் இந்தியாவில், பல குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என கூறப்பட்டாலும் கூட, மக்களவையில் கிட்டத்தட்ட பாதி எம்.பி.க்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன” எனத் தெரிவித்தார்.
இந்தநிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதரை சம்மன் அனுப்பி அழைத்து, இந்திய எம்.பி.க்கள் குறித்த சிங்கப்பூர் பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிங்கப்பூர் பிரதமரின் பேச்சு தேவையில்லாத ஒன்று என சிங்கப்பூர் தூதரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.