100 கோடி கரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தி சாதனையை எட்டியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (22/10/2021) காலை 10.00 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது பிரதமர் பேசியதாவது, "100 கோடி என்ற எண்ணிக்கையைக் கடந்த போதும் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நமது போராட்டம் இன்னும் முடியவில்லை. பண்டிகை காலத்தில் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்வது உள்ளிட்ட கோவிட் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு ஆதரவு’ அளிப்பதோடு மட்டுமின்றி, இந்தப் பண்டிகை நேரத்தில் நமது உற்றார் மற்றும் உறவினர்களுக்குப் பொருட்களை வாங்க செல்லும் போதும் இதனை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தற்போது, முதலீடுகள் மிக அதிக அளவில் வருவதோடு மட்டுமின்றி; இளைஞர்களுக்காக புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
பெருந்தொற்றுக்கு இடையேயும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க சென்ட்ரல் விஸ்டா, பிரதமரின் விரைவு சக்தி திட்டங்களை நாம் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இந்தியர்கள் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வதைக் கோவின் எளிமையாக்கி உள்ளது. நமது சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவியாளராகச் செயல்பட்டது.
இந்தியாவின் தடுப்பூசி திட்டங்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக, அறிவியல் உதவியுடன், அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டது நம் அனைவருக்கும் பெருமிதம் அளிக்கிறது. அனைவரையும் ஒருங்கிணைத்து, ‘தடுப்பூசி- அனைவருக்கும் இலவச தடுப்பூசி’ என்ற பிரச்சார இயக்கத்தை நாம் தொடங்கினோம்.
முக்கிய பிரமுகர்களுக்கு முன்னுரிமை என்ற நிலையைத் தவிர்த்து, நகர்ப்புற மக்களுக்கு இணையாகக் கிராமப்புறங்களுக்கும் இந்தியா இலவச தடுப்பூசி வழங்கியது. 100 கோடி என்ற எண்ணிக்கையை இந்தியா எட்டிய வேகம் பாராட்டத்தக்கது. அதிக மக்களுக்குச் செலுத்தும் வகையில் ‘இலவச தடுப்பூசி’ வழங்கி இந்திய மக்களுக்கு அரசு உதவி செய்துள்ளது" எனத் தெரிவித்தார்.