புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ -முகமது இயக்க தலைவனான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதாக நேற்று ஐ.நா சபை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதற்காக தொடர்ந்து முயற்சித்து வந்த நிலையில் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது. இந்நிலையில் நேற்று ஐ.நா சபையில் இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மசூத் அசாருக்கு எதிராக ஆயுதத்தடை, சர்வதேச பயணத்தடை, சொத்துக்கள் முடக்கம் போன்ற நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அவரது இயக்கம் நிதி வசூலிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்படும்.
இது குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பயங்கரவாத நடவடிக்கைகள் உலகுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது என பாகிஸ்தான் எப்போதும் கூறி வருகிறது. தற்போது ஐ.நா சபை அறிவித்துள்ள இந்த முடிவை பாகிஸ்தான் உடனடியாக செயல்படுத்தும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள பிரதமர் மோடி, " மசூத் அசாருக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது பயங்கரவாதத்தை ஒழிக்கும் இந்தியாவின் தீவிர முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இந்தியாவின் குரலை உலகம் முழுவதும் கேட்டுள்ளது. இது வெறும் தொடக்கம் தான். அடுத்து என்ன நடக்கிறது என்பதை காண காத்திருங்கள். இந்த காவலாளி கடந்த 5 ஆண்டுகளாக உலகளவில் இந்தியாவின் மரியாதையை அதிகரிக்க தீவிர முயற்சி எடுத்து இருக்கிறார்" என கூறியுள்ளார்.