கோவாவின் முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், அமெரிக்காவுக்கு செல்லும் முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், "எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி, உங்களின் ஆசீர்வாதங்களால்தான் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறேன். உங்களின் தொடர் பிரார்த்தனையால் என் உடல்நிலை முற்றிலும் குணமடையும் என நம்புகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
சொன்னதுபோலவே சிகிச்சை முடிந்து நாடு திரும்பியதும், மீண்டும் அரசு பணிகளில் ஈடுபட்டார். ஆனால், நீண்ட நாள் நிலைக்கவில்லை. 63 வயதிலேயே மரணத்தை தழுவிவிட்டார். கோவா முதலமைச்சராகவும், பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பதவி வகித்த மனோகர், எந்த இடத்திலும் அதிகார தோரணையில் நடந்து கொண்டது இல்லை.
2015-ம் ஆண்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது புனேவில், அவரது நண்பரின் மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனோகர் பாரிக்கர். பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல், மக்களோடு மக்களாக வரிசையில் நின்று மணமேடைக்கு சென்று வாழ்த்து தெரிவித்தார். அவர் திருமணத்திற்கு வந்திருந்தது மணமேடையில் இருந்த குடும்பத்தினருக்கு, அப்போது தான் தெரியவந்தது. அந்த அளவுக்கு எளிமையானவர் மனோகர் பாரிக்கர்.
இந்த நிகழ்வை திருமணத்திற்கு வந்திருந்த கிரண் சிட்னிஸ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். அதன்பிறகு தான் இந்த விஷயம் வெளி உலகுக்கு தெரியவந்தது. ஐ.ஐ.டி. பட்டதாரியான மனோகர் பாரிக்கர், விமானத்தில் எக்கானமிக் கிளாசில் பயணம் செய்வதை தான் விரும்பினார். அதேபோல், வெளியிடங்களுக்கு செல்லும்போது, கூடுமானவரை போலீஸ் பாதுகாப்பையும் தவிர்த்தார். அரசியல் வானில் விடிவெள்ளியாக திகழ்ந்த மனோகர். காற்றோடு கரைந்துவிட்டார்.