Skip to main content

மணிப்பூரில் முழு கடை அடைப்பு! - பெண் கொலையால் பதற்றம்

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

Manipur shop closed

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

 

இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில் இருதரப்புக்கும் இடையேயான கலவரமாக மாறியது. இதனால் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த கலவரத்தால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்த கலவரத்தால், இம்பால் கிழக்கு மாவட்டம் சவோம்புங் பகுதியில், 50 வயதுடைய பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கில் ஐந்து பெண்கள் உள்பட ஒன்பது பேரை மணிப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்த இரண்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கிடையில், இந்த பெண் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகா மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் 12 மணி நேரக் கடையடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்குத் தொடங்கியது. மேலும், மணிப்பூரில் ஐக்கிய நாகா கவுன்சில் அமைப்பினர் மாநிலத்தின் மற்ற பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், காய்கறி கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் மூடப்பட்டு இருந்தன. அரசு அலுவலகங்களில் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்கள் வந்து இருந்தனர்.

 

இதற்கிடையில், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள லைமடன் தங்புஹ் கிராமத்தில் கிராம பாதுகாப்புப் படை மீது ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் 30 பேர் கொண்ட கிளர்ச்சிக் குழுவினர் ஒரு சிறிய மலையில் ஏறி கிராம பாதுகாப்புப் படையினர்களைத் தாக்கினார்கள். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்