மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40- க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடனான கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து ஆட்சித் தொடர வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினர். மேலும், சிவசேனாவைச் சேர்ந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.
இதனிடையே, நேற்று (28/06/2022) இரவு மகாராஷ்டிரா ஆளுநரை நேரில் சந்தித்துப் பேசிய, பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில்தான், மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான, ஆளுநரின் உத்தரவில், "நாளை (30/06/2022) காலை 11.00 மணிக்கு சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டப்பட வேண்டும். நாளை மாலை 05.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தி உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை வீடியோ பதிவு செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று (29/06/2022) மாலை மும்பைக்கு திரும்பும் நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ஏக்நாத் ஷிண்டே, "நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் பங்கேற்போம்" எனத் தெரிவித்தார்.
ஆளுநர் உத்தரவைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தை நாட முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.