இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூரில் பழங்குடியின மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில் இருதரப்புக்கும் இடையேயான கலவரமாக மாறியது. இதனால் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த கலவரத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு அமைதி காத்து வந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூர் விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி அதன் மூலம் கலவரத்தைத் தடுப்பது குறித்து விவாதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சமீபத்தில் சந்தித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக நேற்று மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு சென்றுள்ளார். இரண்டு மாதங்களாகத் தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் ராகுல் காந்தியின் இந்த சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் மணிப்பூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் நோக்கிச் செல்வதற்காக நேற்று மாலை ஏராளமானோர் சாலைகளில் குவிந்தனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் பாஜக தலைமை அலுவலகம் நோக்கிச் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் போலீசாரால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களைக் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போலீசார் கலைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் மணிப்பூர் தலைநகரம் இம்பாலில் நேற்று மீண்டும் கலவரம் ஏற்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். இதனால் மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.