உத்தரப்பிரதேசம், லக்கிம்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள், பாஜகவினர், பத்திரிகையாளர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை, கிராம எல்லையிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும், சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். அதேபோல், பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வந்த பஞ்சாப் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை விமான நிலையத்தைவிட்டு வெளியேற அம்மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில், கார் மோதி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 45 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சமும் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தலைமையிலான குழு இன்று (06/10/2021) லக்கிம்பூருக்குச் செல்லவிருந்தது. ஆனால், அக்குழுவுக்கும் மாநில அரசு அனுமதி வழங்கவில்லை.
இந்தச் சூழலில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி எம்.பி., "ஜீப்பால் மோதி விவசாயிகள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் கொல்லப்பட்ட வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. அகங்காரத்தின் காரணமாக விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிராகரிக்கிறது. என்னையும், என் குடும்பத்தினரையும் துன்புறுத்தினாலும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம். நேற்று லக்னோ சென்ற பிரதமர் நரேந்திர மோடி, லக்கிம்பூர் செல்லாதது ஏன்? எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால்தான் இந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வாதிகாரப் போக்குடன் அரசு நடந்துகொள்கிறது; அரசியல் தலைவர்களை உத்தரப்பிரதேசத்தில் அனுமதிக்காதது ஏன்? காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை. இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு நியாயம்தான் கேட்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதனிடையே, அரசு அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி லக்கிம்பூர் செல்ல ராகுல் காந்தி எம்.பி. திட்டமிட்டுள்ளார்.