மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களை பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மே மாதம் 3 ஆம் தேதி இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இந்த கலவரத்தில் 98 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாள் பயணமாக சமீபத்தில் மணிப்பூருக்கு சென்றார். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பலரையும் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டின் முன் குக்கி இன மக்களைக் காப்பாற்றக் கோரி குக்கி இன பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மணிப்பூரில் சிறுபான்மையாக உள்ள குக்கி இன மக்களை காப்பாற்ற வேண்டும். மணிப்பூரில் அமைதியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு குக்கி இன பெண்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.