உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆலம்கிர். ஆசிரியரான இவர், பஞ்ஷீல் வெலிங்டன் என்ற அபார்மெண்ட் குடியிருப்பு ஒன்றில் உருது கற்றுக் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று அபார்ட்மெண்ட் குடியிருப்பில் தரை தளத்தில் லிஃப்டுக்காக காத்துக்கொண்டிருந்த முகமது ஆலம்கிரிடம், மனோஜ் குமார் என்பவர் அவரை வித்தியாசமான முறையில் பார்த்து எங்கே செல்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு முகமது, அபார்ட்மெண்டின் 16வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் உருது மொழி கற்றுக்கொடுப்பதாக கூறியுள்ளார். உடனே மனோஜ் குமார் முகமதுவிடம், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
அதனை முகமது ஏற்க மறுத்ததால், ஆத்திரமடைந்த மனோஜ் குமார், லிப்ஃட்டில் இருந்து அவரை வெளியே தள்ளியுள்ளார். மேலும், மற்றொரு குடியிருப்பாளரை அழைத்தது மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து முகமதுவிடம் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். இதில், குமார் அழைத்ததன் பேரில் வந்த மற்றொரு குடியிருப்பாளர், முகமதுவை கடுமையாக தாக்கி, 16வது மாடிக்கு செல்வதை தடுத்துள்ளார். அதன் பின், இந்த சம்பவத்தை அறிந்த அபார்ட்மெண்ட் பாதுகாவலர், முகமதுவை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார். கடைசி வரையில், பாடம் நடத்தாமலே முகமது ஆலம்கிர் மனமுடைந்து அங்கிருந்து வெளியெ சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக, முகமது ஆலம்கிர், போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், மனோஜ் குமார் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரை, ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல வற்புறுத்தி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.