டெல்லியை சேர்ந்த 17 வயது சிறுவன் துப்பாக்கி வைத்துக்கொண்டு செல்பி எடுத்தபொழுது கைத்தவறி தன் உறவுக்கார அண்ணனை துப்பாக்கியால் சுட்டுவிட்டான் அந்த நபர் மருத்துவமனைக்கு செல்வதற்குள் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஷாதராவில் ஆசிரியராக பணிபுரியும் 23 வயதான பிரசாந்த் சவுன் தனது உறவினரை பார்க்க அவர்களின் வீட்டிற்கு கடந்த வியாழக்கிழமை சென்றுள்ளார். அப்பொழுது பதினொன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் வீட்டிற்கு வந்த பிரசாந்திடம் உங்கள் மொபைலில் செல்பி எடுக்கலாம் என்று அழைத்துள்ளான். அப்போது செல்பி எடுக்கும் முன் அதற்கு போஸ் கொடுப்பதற்காக தந்தை உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இருவரும் புகைப்படம் எடுக்கத்தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு எடுக்கும்பொழுது பிரசாந்த் முன்னே நிற்க, பின்னே நின்ற அந்த சிறுவன் துப்பாக்கியை பிரசாந்தின் நெஞ்சில் வைத்தபடி போஸ் கொடுத்தவாறு இருந்தான். அப்பொழுது திடிரென அந்த சிறுவன் கைதவறி துப்பாக்கியை அழுத்த துப்பாக்கி சுட்டுவிட்டது. அதிலிருந்த குண்டு பிரசாந்தின் நெஞ்சின் வலதுபுறத்தை துளைக்க அப்படியே கீழே விழுந்தார் பிரசாந்த். சத்தம் கேட்டு வந்த அச்சிறுவனின் குடும்பத்தார் பிரசாந்தை பக்கத்திலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரசாந்த் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தற்செயலாக நடந்ததால் அந்த சிறுவனை கைது செய்த சரிதா விஹார் போலீசார் அவன் மீது இந்திய தண்டனைச்சட்டம் 304ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சிறுவனின் தந்தையின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளதால் அவரின் துப்பாக்கி உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆயுத சட்டம் 30ன் கீழ் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் மற்றோரு சோகம் என்னவென்றால் பிரசாந்தின் அம்மா, அப்பா, இரண்டு அண்ணன்கள் நான்கு வருடத்திற்கு முன்பு ஒரு விபத்தில் இறந்துவிட்டனர் தானாக படித்து தற்போதுதான் ஆசிரியர் பணிக்கு இணைந்துள்ளார். அதற்குள் இச்சம்பவம் நடந்து இறந்துவிட்டார் பிரசாந்த்.