மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இந்த கலவரத்தில் 70 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். கலவரக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைக்காக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், மணிப்பூர் மாநிலத்திற்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும், சாலை போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலவரம் நடைபெற்ற இடத்தை ராணுவம் மற்றும் துணை ராணுவத்தின் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இயல்பு வாழ்க்கை தற்போது மெல்லத் திரும்பி வருகிறது.
கலவரத்தைத் தொடர்ந்து மணிப்பூரில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 170க்கு விற்கப்பட்டது. ஒரு சமையல் சிலிண்டரின் விலை கள்ளச் சந்தையில் ரூ. 1800க்கு விற்கப்பட்டது. ரூ. 900க்கு விற்ற ஒரு மூட்டை அரிசி ரூ. 1800க்கு விற்கப்பட்டது. இதேபோன்று பால், முட்டை என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பாததால் பொதுப் போக்குவரத்திற்கு சரிவர அனுமதி அளிக்கப்படவில்லை. அதனால் வெளியூரில் இருந்து வரும் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு மணிப்பூரில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும், மீண்டும் கலவரம் ஏற்படும் என்ற பயத்தால் காய்கறிகள் கொண்டு வரும் லாரிகள் கூட மணிப்பூருக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. அதனால் ஏற்கனவே கடைகளில் கையிருப்பு உள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து பேசினார். மணிப்பூர் கலவரம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி ஜனாதிபதியிடம் மல்லிகார்ஜுன கார்கே முறையிட்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர்.
இந்நிலையில் தான் மணிப்பூர் செல்ல மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இது குறித்து அவர் கூறும்போது, மணிப்பூரில் உள்ள உண்மை நிலைமையை நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்ல நான் அங்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தான் எழுதிய கடிதத்தையும் வாசித்தார், “அமைதியை விரும்பும் மணிப்பூர் மக்களைச் சந்திக்க மணிப்பூர் செல்ல உங்கள் அனுமதியைக் கோருகிறேன். நான் ஒருநாள் பயணமாகவே மணிப்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளேன். தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, ராணுவம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை நான் மீற விரும்பவில்லை” என தான் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “மணிப்பூருக்கு மத்திய அரசின் சார்பாக அவர்கள் (அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள்) செல்ல வேண்டும் என பல நாட்களாக சொல்லி வருகிறேன். ஆனால் அவர்கள் களத்தில் மக்களை சந்திக்கமாட்டார்கள். மணிப்பூரில் தற்போது வரை எத்தனை பேர் இறந்துள்ளார்கள், அங்கு தற்போதைய நிலைமை எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். மேலும் நான் கடிதம் எழுதிய பிறகு தான் அமித்ஷா மணிப்பூருக்கு சென்றுள்ளார். ” எனக் கூறியுள்ளார்.