மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விபத்தில் சிக்கி காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.
அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 13 ஆம் தேதி காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 'இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் நிராகரித்திருந்தார். மேலும் இந்த கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொல்கத்தாவில் ஏற்பட்ட கார் விபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பர்த்வானில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்புகையில் எதிரே வந்த கார் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து மம்தா பயணித்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. முன்னதாக ஹெலிகாப்டரில் பயணிக்க மம்தா பானர்ஜி திட்டமிட்ட நிலையில் மோசமான வானிலை காரணமாக அவர் சாலை மார்க்கமாக திரும்புகையில் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.