மதத்தின் பெயரால் சில மனிதர்கள் வேறுபட்டு நிற்கும் இந்தச் சூழலில், கேரளா ஆலப்புழாவில் உள்ள ஒரு இந்து கோயிலில் பூஜைகள் நடக்கும்போது முஸ்லீம் ஒருவர், மேளம் வாசிக்கும் முறை பலரையும் வியக்க வைத்துள்ளது. அதேபோல், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்ற கோபாலகிருஷ்ணன், 100 முஸ்லீம் பள்ளிகளை வடிவமைத்துக் கட்டியிருப்பது அனைத்து தரப்பினராலும் கவரப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் பேக்கரி ஜங்ஷனில் "கடவுள் சன்மானம்" என்ற பெயர் கொண்ட இல்லத்தில் வசிக்கும் கிருஷ்ணனுக்கு வயது 84. பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லீம் மதத்தினர் அவரின் வீட்டுக்குச் சென்று வாழ்த்துக்களைக் கூறி வருகிறார்கள். இந்த நிலையில், கேரளாவில் 100 பள்ளி வாசல்களை வடிவமைத்துக் கட்டியதோடு மட்டுமல்லாமல் அங்கு புகழ்பெற்ற திருவனந்தபுரம் பீமா பள்ளியும், சபரிமலை எருமேலி வாவர் மசூதியையும் வடிவமைத்து அவர் கட்டியதையும் நினைவு கூர்கின்றனர் மக்கள்.
இதுகுறித்து அவர் கூறியதாவது; 1966-ல் என்னுடைய 18 வயதில் பீமா பள்ளியை வடிவமைத்து அதைக் கட்டி முடிக்கும் பொறுப்பை முஸ்லீம் பெரியவர்கள் என்னிடம் நம்பிக்கையோடு கொடுத்தனர். 18 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட அந்த பள்ளி அங்கு வரும் முஸ்லீம் மற்றும் இந்து, கிறிஸ்தவர்களால் காணிக்கை கொடுக்கப்பட்ட பணத்தில் கட்டப்பட்டது. அதனால் இன்றைக்கு லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகளோடு மத ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அனைத்து மதத்தினரும் அந்த பள்ளிக்குச் செல்கிறார்கள்.
அந்தப் பள்ளி கட்டும்போது அருகில் உள்ள விமான நிலைய நிர்வாகம் தடுத்தது. ஏனென்றால் அந்த காலகட்டத்தில் அதிக உயரமான 132 அடி உயரத்தில் ஸ்தூபி கட்டப்படுவதால் விமானம் தரையிறங்கும் போது இடையூறு இருக்கும் என்று கருதினார்கள். பின்னர் அவர்கள் கொடுத்த 3 ஒப்பந்தங்களான பள்ளிக்குப் பச்சை வர்ணம் பூசக்கூடாது, அதற்கு பதில் சிவப்பும் வெள்ளையும் தான் பூச வேண்டும். அதுபோல் ஸ்தூபியின் மீது சிவப்பு மின் விளக்கு பொருத்தப்பட வேண்டும். மேலும் கால பருவநிலை மாற்றத்தின் போது விமான நிலைய நிர்வாகம் கேட்டுக் கொள்ளும்படி ஸ்தூபியின் விளக்குகளைப் போடவும் நிறுத்தவும் செய்ய வேண்டும் என்றனர். அதுபோல் தான் இன்று வரை நடைமுறையில் இருக்கிறது.
அதே போல் சபரிமலைக்குச் செல்லும் லட்சக் கணக்கான பக்தர்கள் முதலில் எருமேலியில் உள்ள வாபர் மசூதிக்குச் சென்று தரிசித்துவிட்டுச் செல்வார்கள். இது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துகாட்டாக இருப்பது பெருமையாக உள்ளது. இதே போல் பாளையம் ஜூம்மா மஸ்ஸீத் பள்ளி வாசல், கருநாகபள்ளியில் தாஜ்மஹால் மாதிரி கொண்ட பள்ளி வாசல் எனக் கேரளா முழுவதும் என் கைவண்ணத்தில் உருவான அந்த பள்ளிகளைப் பார்க்கும் போது பெருமையாகவும் மகிழ்சியாகவும் உள்ளது.
இதற்காக நான் கட்டடம் சம்பந்தமாக இன்ஜினியரிங் படிப்பு எதுவும் படிக்கவில்லை. வெறும் 10-ம் வகுப்பு தான். என் மனதில் தோன்றியதை கை விரல்கள் மூலம் வடிவமைத்தேன். 2 ஆண்டுகளுக்கு முன் ஆராட்டு முள பள்ளி வாசலை வடிவமைத்துக் கட்டியது தான் என் கடைசி பணி, என்றார்.