மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய அரசுக்குமான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தநிலையில் சமீபத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள் மேற்கு வங்க ஆளுநரை சந்தித்தனர். இதன்தொடர்ச்சியாக மேற்குவங்கத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தைய கலவரங்கள் தொடர்பாக மேற்குவங்க ஆளுநர், மம்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
மேலும் அந்த கடிதத்தை அவர், பொதுமக்களுக்கும் வெளியிட்டார். இதற்கு மேற்குவங்க அரசு அதிருப்தி தெரிவித்தது. உண்மைக்கு முரணான தகவல்கள் ஆளுநரின் கடிதத்தில் இருப்பதாகவும் கூறியது. இந்தநிலையில் இன்று மேற்குவங்க முதல்வர் மம்தா, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், மத்திய அரசுக்கும் ட்விட்டருக்கு இடையேயான பிரச்னை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மம்தா, "அவர்களால் ட்விட்டரை கட்டுப்படுத்த முடியாது எனவே அச்சுறுத்துகிறார்கள். அவர்களால் என்னை கட்டுப்படுத்த முடியாது. எனவே அவர்கள் எனது ஆட்சியையும், கட்சியையும் அச்சுறுத்துகிறார்கள். அவர்களால் பத்திரிகையாளர்களை கட்டுப்படுத்த முடியாது எனவே அவர்களை கொல்கிறார்கள். ஒருநாள் இது முடிவுக்கு வரும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், யாஸ் புயலுக்கு பிறகு மத்திய அரசு தங்களுக்கு நிதி வழங்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி, நிதியுதவி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.