Skip to main content

பெகாசஸ் விவகாரம்: விசாரணை ஆணையத்தை அமைத்த மம்தா பானர்ஜி!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

MAMATA BANERJEE

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக்கேட்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இருவர், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் தொலைபேசி எண்கள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டன அல்லது ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என இந்தப் பெகாசஸ் ஹேக்கிங் குறித்து 'பெகாசஸ் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் ஆய்வுசெய்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது பெரும் சர்ச்சையானது.

 

எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேநேரத்தில் இந்த ஊடக செய்திகள், இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் முயற்சி எனவும், பெகாசஸ் மூலம் யாரும் உளவு பார்க்கப்படவில்லை எனவும் மத்திய அரசு கூறிவருகிறது.

 

இந்தநிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா, பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் இரண்டு பேர் கொண்ட ஆணையத்தை அமைத்துள்ளார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர், ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோதிர்மய் பட்டாச்சார்யா இந்த ஆணையத்தின்  உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 

 

இந்த விசாரணைக் குழு அமைத்தது குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "பெகாசஸ் மூலம், நீதித்துறையில் உள்ளவர்கள், சமூக அமைப்புகளில் உள்ளவர்கள் உட்பட அனைவரும் கண்காணிக்கப்படுகின்றனர். மத்திய அரசு, இதனை உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. விசாரணை ஆணையத்தைத் தொடங்கிய முதல் மாநிலம் மேற்கு வங்கம். மூத்த நீதிபதி மதன் பீம்ராவ் லோகூர் மற்றும் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மய் பட்டாச்சார்யா ஆகியோரின் தலைமையில், நாங்கள் ஆணையத்தைத் தொடங்கியுள்ளளோம். சட்டவிரோதமாக ஹேக்கிங் செய்வது, கண்காணிப்பது, மொபைல் ஃபோன் அழைப்புகளைப் பதிவுசெய்தல் போன்றவற்றை அவர்கள் கண்காணிப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்