குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் தொடர் பேரணிகளை நடத்தி வருகிறார்.
அந்த வகையில், புருலியாவில் நடந்த பேரணியின் போது மம்தா குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி குறித்து மக்களிடம் ஆவேசமாக உரையாற்றினார். இந்த பேரணியில் பேசிய அவர், "இந்தியாவின் சட்டப்பூர்வ குடிமக்களின் குடியுரிமையை பறிக்க மத்திய அரசு முயல்கிறது. பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றாக திரளுங்கள். எல்லா இடங்களிலும் பாஜகவைத் தனிமைப்படுத்துங்கள். அமைதியாகப் போராடுபவர்களை தேச விரோதிகள் என மத்திய அரசு முத்திரைக் குத்துகிறது. உங்கள் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கிறதா என்பதை மட்டும் நீங்கள் உறுதி செய்யுங்கள். மற்றதை என்னிடம் விட்டு விடுங்கள். யாரும் இந்த நாட்டை விட்டு வெளியேற தேவையிருக்காது" என தெரிவித்தார்.