நாட்டின் 77வது சுதந்திர தினம் நேற்று (15-08-23) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 7 மணியளவில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அவர் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அதில் அவர், “என்னுடைய இரண்டாவது பிரதமர் பதவிக் காலத்தில் 10வது முறையாக உரையாற்றுகிறேன். இந்தியா அடைந்துள்ள சாதனைகளை அடுத்த ஆண்டு மீண்டும் இதே இடத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மக்களிடம் பட்டியலிடுவேன்” என்று தெரிவித்தார். பிரதமர் மோடி கூறிய இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் விமர்சன கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதில் அளித்துள்ளார். அதில் அவர், “தேர்தலில் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் மக்களின் கைகளில் உள்ளது. மீண்டும் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவேன் என்று பிரதமர் கூறுவது அவரது ஆணவத்தைக் காட்டுகிறது. அவர் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகிறார். சுதந்திர தின உரையில் கூட எதிர்க்கட்சிகளைப் பற்றி விமர்சனம் செய்பவரால் நாட்டை எப்படி கட்டி எழுப்ப முடியும். அடுத்த ஆண்டு அவர் மீண்டும் தேசியக் கொடியை ஏற்றுவார். ஆனால், அதை அவரது வீட்டில் செய்வார்” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல், மோடியின் உரை குறித்து கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி எம்.பி. சுஷில் குமார் குப்தா, “ஒன்பது ஆண்டு ஆட்சியில் இருந்தும் அவர்கள் தங்களது ஆட்சியில் என்ன செய்தோம் என அறிக்கை கொடுக்க முடியாமல் இருப்பது எனக்கு விசித்திரமாக இருக்கிறது. இந்தியா அடைந்துள்ள சாதனையை அடுத்த ஆண்டு தான் பட்டியலிடுவேன் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அடுத்த ஆண்டு செங்கோட்டையில் யார் தேசியக் கொடியை ஏற்றுவார் என்பதெல்லாம் பொதுமக்கள் முடிவு செய்து கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.