மகாத்மா காந்தியின் 75- வது நினைவுநாளையொட்டி, டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினர். அதைத் தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி., மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்த புண்ணிய நாளில் நாம் ஒவ்வொரு வரும் மகாத்மா காந்தியை நினைவுக் கூற வேண்டும். அவரது உன்னதமான லட்சியங்களை மேலும் பிரபலமாக்கும் விதமாக ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். தியாகிகள் தினத்தில் தேசத்தைக் காக்கவீரத்துடன் செயல்பட்ட உத்தமர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதோடு, அவர்களது தாய் நாட்டு பணியையும், நெஞ்சுரத்தையும் என்றும் நினைவில் நிறுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.