இந்தியாவில் கரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நேற்று (17.03.2021) மாநில முதல்வர்களுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “வளர்ந்து வரும் கரோனாவின் இரண்டாவது அலையை உடனடியாக நிறுத்திட வேண்டும். இல்லையென்றால் நாடு முழுவதும் நாடு முழுவதும் கரோனா அலை ஏற்படும்” என தெரிவித்தார்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மஹாராஷ்ட்ரா, குஜராத், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் சில கரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் மஹாராஷ்ட்ராவில் நேற்று ஒரே நாளில் 23,179 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது இந்த வருடத்தில், ஒரே நாளில் உறுதிசெய்யப்பட்ட அதிகபட்ச கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். இதனையடுத்து, வேகமாகப் பரவும் புதியவகை கரோனாவின் பாதிப்பு அங்கு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய கரோனா பாதிக்கப்பட்ட மேலும் பலரின் மாதிரியை சோதனைக்கு அனுப்புமாறு தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், மஹாராஷ்ட்ரா அரசிடம் கேட்டுள்ளது.
கரோனா பரவல் மீண்டும் உச்சத்தை தொடும் நேரத்தில், ஒரே ஒரு ஆறுதலாக இந்த முறை கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது. கரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் சுகாதாரத்துறைச் செயலாளர் கூறுகையில், “கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 0.4 சதவீதமாக இருக்கிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு அறிகுறி இல்லை. எனவே பரிசோதனை நடத்த நடத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரும். இரண்டாவது அலை எப்போதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்பதால், நாம் கவலைகொள்ளத் தேவையில்லை” என்றார். கரோனா முதல் அலையை விட, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மஹாராஷ்ட்ராவிற்கு அடுத்தபடியாக, நேற்று பஞ்சாபில் அதிகம் பேருக்கு கரோனா உறுதியானது. அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 2,039 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.