புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலகம் முழுவதும் பல்வேறு குரல்கள் எழுந்து வருகின்றன.
இது தொடர்பாக, பாடகி ரிஹானா, நடிகை மியா கலிஃபா உள்ளிட்டவர்கள் தெரிவித்த கருத்துகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தன. அதே நேரத்தில், பிறநாட்டுப் பிரபலங்கள் இந்த விவகாரத்தில் கருத்து கூறுவதற்கு எதிராக, இந்தியப் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். சச்சின், லதா மங்கேஷ்கர், சாய்னா நேவால் உள்ளிட்ட இந்தியப் பிரபலங்கள், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்கிற ரீதியில் கூறிய கருத்துகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் பிரபலங்களின் இந்த ட்விட்டிற்கு பின்னால், பாஜக இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இந்தநிலையில் இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில புலனாய்வுத் துறை விசாரணை நடத்தும் என மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "பிரபலங்களின் ட்வீட்டில், வார்த்தைகளில் கூட எந்த வேறுபாடுமில்லை. வரிகள் அப்படியே உள்ளன. நேரம் கூட ஒன்றாகத்தான் உள்ளது. இது ஒரு தீவிரமான பிரச்சனை. பிரதமர் மோடி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையைத் தீர்த்திருக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.