புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல், 32 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 2006இல் நடைபெற்றது. அந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2011இல் நிறைவடைந்தது. அதன் பிறகு 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இதனை எதிர்த்து பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தேர்தல் நடத்தப்படவில்லை. அதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் ‘அக்டோபர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது சட்டவிரோதம்’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு தேவையான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டது.
மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகள் வரையறை செய்யப்பட்டு, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி. தாமஸ் செய்தியாளர்களுக்கு நேற்று (22.09.2021) நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “புதுச்சேரி மாநிலம் சுதந்திரம் அடைந்து 2 முறை உள்ளாட்சித் தேர்தலை சந்தித்துள்ளது. இறுதியாக 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் தேர்தல் நடத்தப்படவில்லை. 2012ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக சில பணிகள் முடிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் பணியைத் தொடர்வதற்கு வசதியாக இருந்தது. உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை வாக்குச்சீட்டு அடிப்படையில் கடந்த காலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.
தற்போது முதல்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட இருக்கிறது. ஏற்கனவே புதுச்சேரியில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டாலும், தற்போது உள்ளாட்சித் தேர்தலில் 1,149 பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்படுவதால் மிக அதிக எண்ணிக்கையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்பட்டன. புதுச்சேரியில் 1,100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே இருந்தது. இதனை சமாளிக்க தெலங்கானாவிலிருந்து 1200, கர்நாடகாவிலிருந்து 1300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. புதுச்சேரியிலுள்ள 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகள், 108 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடங்கிய 1,149 பதவிகளுக்கான தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் மாதம் 21, 25, 28 ஆகிய தேதிகளில் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி முதற்கட்டமாக அக்டோபர் 21ஆம் தேதி மாஹ, ஏனாம் மற்றும் காரைக்கால் நகராட்சிகளுக்கும் கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, டி.ஆர்.பட்டினம், திருநள்ளாறு ஆகிய 5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலுக்காக செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். மறுநாள் எட்டாம் தேதி, மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 11ஆம் தேதி மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகும். அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக அக்டோபர் 25ஆம் தேதி புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்குத் தேர்தல் நடைபெறும். இதற்கு 4ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். 12ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.
15ஆம் தேதி மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள கடைசி நாளாகும். அதன்பிறகு இறுதி கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி அரியாங்குப்பம், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், வில்லியனூர், பாகூர் ஆகிய 5 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள பதவிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. இதற்கு ஏழாம் தேதி முதல் 15ம் தேதி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். 16ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். 18ஆம் தேதி மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள கடைசி நாளாகும். தொடர்ந்து அனைத்து வாக்குகளும் 7 வாக்கு எண்ணிக்கை மையங்களில் அக்டோபர் 31ஆம் தேதி ஒரே நேரத்தில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்” என அவர் கூறினார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் புதுச்சேரி மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.