அரசு ஊழியர்களும், அரசு பணியாளர்களும் தொலைபேசியை பயன்படுத்துவதற்கு மஹாராஷ்ட்ரா அரசு, வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது. மஹாராஷ்ட்ராவின் பொதுநிர்வாகத் துறையால் வெளியிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகள், அரசின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதால் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்ட்ரா அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி, "அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அலுவலகங்களில் அலுவல் பணிக்கு தொலைபேசி பயன்படுத்துவதைக் குறைத்துக்கொண்டு, லேண்ட்லைன் பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும். செல்போனில் பேசும்போது கனிவான குரலில் பேச வேண்டும். மற்றவர்களுக்கு தகவல் தெரியாத வகையில் கவனமாக பேசவேண்டும். வாக்குவாதம் செய்யவோ, சத்தமாக பேசாவோ, நாகரிகம் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தவோ கூடாது.
அலுவலக நேரத்தில் தொலைபேசி மூலம் சமூகவலைதளத்தை பயன்படுத்துவதை முடிந்த அளவு குறைத்துக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட அழைப்புகள் ஏதும் வந்தால், அலுவலத்துக்கு வெளியே சென்று பேசிவிட்டு வரவேண்டும். உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து அழைப்புகள் வந்தால், அதற்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும். வேறு ஒரு அழைப்பில் இருந்தாலும், அந்த அழைப்பை ரத்து செய்துவிட்டு உயர் அதிகாரிகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
அலுவலக ரீதியாகக் கூட்டம் நடக்கும்போதோ, அல்லது உயர் அதிகாரிகளைச் சந்திக்கச் செல்லும்போதோ, கூட்டத்தில் பங்கேற்கும்போதோ தொலைபேசி நிசப்தத்தில் (silent) இருக்க வேண்டும்" இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.