மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்த பைசல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, வெவேறு குழுக்களுக்கிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் பைசல் செயல்பட்டதாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், மிஸ்ராட் காவல்நிலைய போலீசார் கடந்த மே மாதம் பைசலைக் கைது செய்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படியும், ஜாமீன் கோரியும் பைசல் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, நீதிபதி பாலிவால் பைசலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், அந்த உத்தரவில், நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் காலம் முழுவதும் பைசல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். வழக்கு முடியும் வரை ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் நான்காம் செவ்வாய் கிழமைகளில் நேரில் வரவேண்டும். அப்படி வரும்போது மிஸ்ராட் காவல் நிலையத்தில் உள்ள தேசியக் கொடியின் முன்பு நின்று 21 முறை வணக்கம் செலுத்தி பாரத் மாதா கி ஜெய் என உச்சரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.