பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாத இறுதி வார ஞாயிற்றுக்கிழமைகளில் 'மான் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று (27/06/2021) காலை 11.00 மணிக்கு வானொலி மூலம் பிரதமர் உரையாற்றினார்.
அப்போது பிரதமர் கூறியதாவது, "டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். திறமை, அர்ப்பணிப்பு, மன உறுதி, நேர்மை எல்லாம் சேரும் போது ஒரு சாம்பியன் உருவாகிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என மில்கா சிங்கிடம் பேசியிருந்தேன். கரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு நபரும் தனது பங்களிப்பை அளித்துள்ளனர். நான் உலகிலேயே பழமையான தமிழ் மொழியின், தமிழ் கலாச்சாரத்தின் பெரிய அபிமானி.
தமிழ் மொழியின் மீதான என்னுடைய அன்பு என்றுமே குறையாது; தமிழ் மீது மிகவும் பெருமிதம் பொங்குகிறது. தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவியின் பயிற்சிக்காக, அவரது தாயார் தனது நகைகளை அடமானம் வைத்துள்ளது நெகிழ்ச்சியளிக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள் போராடி வந்திருக்கிறார்கள். கரோனா தடுப்பூசிப் போட்டால் காய்ச்சல் வருவது சாதாரண விஷயம் தான். ஆனால் தடுப்பூசிப் போடாவிட்டால் அது மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போய் சேர்க்கும்." இவ்வாறு பிரதமர் கூறினார்.