இந்தியாவில் கரோனாவிற்கு எதிராக, கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு முழு வீச்சில் செலுத்தப்பட்டுவருகின்றன. ஸ்புட்னிக் v தடுப்பூசி, இந்தியாவில் இன்னும் வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கு வரவில்லை. அண்மையில் மத்திய அரசால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட மாடர்னா தடுப்பூசி இன்னும் இந்தியாவிற்கு வந்து சேரவில்லை.
இந்தநிலையில், கோவாக்ஸ் திட்டம் மூலம் இந்தியாவிற்கு 75 லட்சம் மாடர்னா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக உலக சுகாதர நிறுவனத்தின் தென்-கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் இந்தத் தடுப்பூசிகள் எப்போது இந்தியாவிற்கு வழங்கப்படும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “அது சட்டப் பாதுகாப்பு வழங்கப்படுவதைப் பொறுத்தது” என கூறியுள்ளார்.
சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டால், மாடர்னா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு இந்தியாவில் வழக்கு தொடர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஃபைசர் உள்ளிட்ட தடுப்பூசி நிறுவனங்கள், சட்டப் பாதுகாப்பு பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.