இரவு முழுவதும் மகனின் உடலோடு கொட்டும் மழையில் தவித்த தாய்!
டெங்கு பாதிப்பால் உயிரிழந்த சிறுவனின் உடலை வீட்டு உரிமையாளர் வீட்டிற்குள் கொண்டுவர அனுமதிக்காததால், அந்த சிறுவனின் தாயார் இரவு முழுவதும் உடலுடன் வெளியில் இருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் மாநிலம் மக்பூர் நகரைச் சேர்ந்த ஈஸ்வரம்மா சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஷ்வர் நகர் பகுதியில் தனது இரண்டு மகன்களுடன் ஒரு வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் இவரது இரண்டாவது மகன் சுரேஷ் (வயது 10) டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், அவரது உடலை வீட்டிற்கு கொண்டுவந்துள்ளார்.
ஆனால், அவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளர், டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவனின் உடலை வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று மறுத்துள்ளார். பின்னர், ஈஸ்வரம்மா அவரது மூத்த மகனுடன் தன் உயிரிழந்த மகனின் உடலுக்கு அருகில் வேறுவழியின்றி இரவுமுழுவதும் கொட்டும் மழையில் இருந்திருக்கிறார். அக்கம்பக்கத்தினர் யாரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை.
காலையில், அந்தவழியே சென்றவர்கள் தகவலறிந்து வீட்டு உரிமையாளரைக் கடுமையாக கண்டித்து, சிறுவனின் இறுதி சடங்கிற்கான உதவிகளைச் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ச.ப.மதிவாணன்