இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக கோவா உள்ளது. இங்கு பிற மாநிலங்களை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் மது அருந்துவது, சமைத்து சாப்பிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அங்கு பல சட்டஒழுங்கு பிரசாகனைகள் ஏற்படுவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் கோவா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவா கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மது பாட்டில்களை உடைக்கவோ, மது குடிக்கவோ கூடாது. மேலும் மதுபாட்டில்களையும் எடுத்து வருதல், திறந்தவெளியில் உணவுகளை சமைத்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுவோருக்கு ரூ.10,000 வரை அபராதமும், அபராதத்தைச் செலுத்த தவறினால் 3 மாதம் சிறையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.