Skip to main content

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்; ஒடியாவில் பதில் கடிதம் எழுதிய ஒடிசா எம்.பி.!

Published on 20/08/2017 | Edited on 20/08/2017
இந்தியில் கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்; ஒடியாவில் பதில் கடிதம் எழுதிய ஒடிசா எம்.பி.!

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய அமைச்சருக்கு, ஒடிசாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒடியா மொழியில் பதில் கடிதம் எழுதி பதிலடி கொடுத்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர் ததகட்டா சத்பதி. இவருக்கு கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி, மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மாவட்ட அளவிலான ‘விஷன் இந்தியா 2022’ நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அழைப்புவிடுத்து, கடிதம் ஒன்றை இந்தி மொழியில் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதத்தின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சத்பதி, ‘எதற்காக மத்திய அமைச்சர்கள் இந்தி பேசாத குடிமக்களின் மீது, இந்தியைத் திணிக்கிறார்கள்? மற்ற மொழிகளின் மீதான தாக்குதலா இது?’ என கேள்வியெழுப்பியிருந்தார்.

மத்திய அமைச்சர் இந்தியில் எழுதிய கடிதம்



இதையடுத்து நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சருக்கு பதிலளிக்கும் விதமாக, ஒடியா மொழியில் எழுதிய கடிதத்தை சத்பதி பதிவிட்டுள்ளார். அதில், ‘மாண்புமிகு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்தியில் எழுதிய கடிதத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை, ஒடியா மொழியில் பதில் கடிதமாக எழுதியுள்ளேன்’ என தெரிவித்துள்ளார். மேலும், ஒடிசா மாநிலம் ‘சி’ வகை மாநிலமாக இருப்பதால் உங்கள் கடிதங்களை ஆங்கிலம் அல்லது ஒடியா மொழியில் எழுதவும் எனவும் அதில் தெரிவித்திருந்தார்.

ஆட்சி மொழிகள் சட்டத்தில், மத்திய அமைச்சரவையில் இருந்து மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் ‘சி’ பிராந்தியங்களில் உள்ள அலுவலகங்கள் அல்லது அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், ஆங்கில மொழியிலும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி. சத்பதி ஒடியாவில் எழுதிய கடிதம்



நாடு முழுவதும் இந்தி எதிர்ப்பை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதில் 1965-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் மிக முக்கியமானது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பலர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். நாட்டில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார்.

கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்தது. இந்நிலையில், இந்த விவகாரம் மீண்டும் ‘இந்தித் திணிப்பு’ எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியுள்ளது. 

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்